ஞாயிறு, 28 நவம்பர், 2010

ராகுல் பார்முலா தோல்வி ! தி.மு.க.வுக்கு லாபமா...?



“ வளர்ச்சிப் பாதையில் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்” பீகார் மக்கள் அளித்திருக்கும் ஒருவரி தீர்ப்பு இது. கடந்த 2 மாதங்களில் 6 கட்டங்களாக நடைபெற்ற பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 24ஆம் தேதி வெளியாகின. இதில் பீகாரின் தற்போதைய முதல்வர் நிதீஷ்குமார் தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ.க கூட்டணி அமோக வெற்றிபெற்றது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இக்கூட்டணி 206 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.நிதீஷ்குமார் கட்சி சிறிது முயற்சித்தால் தனித்தே ஆட்சியமைக்கும் அளவுக்கு 115 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.



இத்தேர்தலில் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான லாலுபிரசாத் - ராம்விலாஸ் பாஸ்வான் கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 243 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். நிதீஷ்குமாரின் வெற்றி எந்தளவுக்கு நாடுமுழுவதும் பேசப்படுகிறதோ அதைவிட அதிகமாக பேசப்படுவது காங்கிரஸ் கட்சியின் தோல்விதான். இதற்கு காரணம் ராகுல்காந்தியின் ‘செல்வாக்கையும்’, பேச்சையும் நம்பி காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டதுதான். தனித்து நின்றால் கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்ற ராகுலின் கருத்தை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் இணைந்திருந்த லாலு கூட்டணியை உதறிவிட்டு தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி ஆகியோர் தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். குறிப்பாக ராகு¢காந்தி 25 தொகுதிகளை தேர்வு செய்து சூறாவளி சுற்றுப்பணயம் மேற்கொண்டபோது மக்கள் கூட்டம் அலைமோதியது.ஆனால் எந்த கூட்டமும் வாக்காக மாறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த 25 தொகுதிகளில் ஒன்றில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.




இந்த படுதோல்வியால் அதிர்ச்சியடைந்துள்ள காங்கிரஸ் தலைமை பீகாரில் மீண்டும் கட்சியை அடிப்படை கட்டமைப்பில் இருந்து கட்டி எழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. பீகார் தேர்தல் முடிவுகளை பொறுத்தே அடுத்துவரும் தமிழகம் உள்ளிட்ட மாநில சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு அமையும் எதிர்பார்க்கப்பட்டதால் இத்தோல்வியை அக்கட்சியினர் பெரும் பின்னடைவாகவே கருதுகின்றனர்.இதனால் அடுத்து நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ‘விஷப்பரிட்சையை மேற்கொள்ள துணியுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.




இதனை சரியான சந்தர்ப்பமாக கருதும் திமுகவும் காங்கிரஸ் கட்சியை நம்பி நாங்கள் இல்லை என உணர்த்த நினைக்கிறது. இதன் அறிகுறியாகவே பீகார் தேர்தல் முடிவுகள் வெளியான 24ஆம் தேதி மாலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற வேளாண் கருத்தரங்கில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி “தேவைப்பட்டால் மத்திய அரசில் இருந்து ஒதுங்கி இருப்போம்” என சூசகமாக கூறினார்.




அரசு சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் முதலமைச்சர் அரசியல் பேசியதை ஆச்சர்யத்துடன் பார்க்கும் அரசியல் நோக்கர்கள், பீகாரில் காங்கிரஸ§க்கு ஏற்பட்ட பின்னடைவு தமிழகத்திலும் ஏற்பட்டுவிடும் என்று எச்சரிக்கும் வண்ணமாகவே முதல்வர் பேசியதாக கருதுகின்றனர். ராகுலின் செயல்பாடுகளை வைத்தே தமிழகத்தில் திமுகவை மிரட்டிவரும் அக்கட்சித் தலைவர்களுக்கு பதிலடி கொடுக்க இதுவே தருணம் என்பதை உணர்ந்துதான் முதலமைச்சர் அப்படி பேசியதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. மொத்தத்தில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் திமுகவிற்கு இருந்த மறைமுக அச்சத்தை சற்று குறைத்துள்ளதாகவே கருதப்படுகிறது. அதேநேரத்தில் குஜராத், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்தபோதும் ராகுல்காந்தி பார்முலா பீகாரில் முன்னெடுக்கப்பட்டதைபோல் தமிழகத்திலும் பின்பற்றப்படும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் பணியுமா? அல்லது மீண்டும் பாயுமா? என்பதை பொறுத்திருந்தே பார்க்கமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக