சனி, 13 நவம்பர், 2010

வென்றது ஜனநாயகம்... மலரும் மக்களாட்சி...!


”தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும்
” என்ற கூற்றை நிரூபித்து இருக்கிறார் உலகின் ஒட்டுமொத்த ஜனநாயகவாதிகளின் நம்பிக்கை நட்சத்திரமான ஆங் சான் சூகி. வசதியுடன் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகள் இருந்தும் தன் நாட்டு மக்களின் விடுதலைக்காக போராடிய இவரை அடக்கி ஆள முற்பட்டனர் மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள். ஆனால் தொடர் போராட்டத்தின் விளைவாக உலகின் ஒட்டுமொத்த பார்வையையும் தன் நாட்டை நோக்கி ஈர்த்தார் சூகி.

விளைவு 1962ஆம் ஆண்டுமுதல் நடந்தேறிய ராணுவ ஆட்சிக்கு முடிவு கட்டும் கனவுடன் 1990-ல் நடைபெற்றது மியான்மர் பொதுத் தேர்தல். இத்தேர்தலில் ஆங் சான் சூகியின் ”ஜனநாயகத்திற்கான விடுதலை முன்னணி” 82 விழுக்காடு இடங்களில் அபாரவெற்றி பெற்றபோதும் ராணுவ ஆட்சியாளர்கள் ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த மறுத்தனர். அதனை எதிர்த்த ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூகியை வீட்டுக்குள் அடைத்த கொடுங்கோலர்கள், அவரது கணவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கக்கூட அனுமதி மறுத்தனர்.


அத்தனையையும் பொறுத்துக்கொண்டு ஜனநாயகப்போராட்டமே வெற்றிக்கு வழி என செயல்பட்ட சூகிக்கு அமைதிக்கான நோபல் பரிசும், இந்தியாவின் நேரு விருதும் வழங்கப்பட்டது. எத்தனை விருதுகள் வழங்கப்பட்டபோதும், ஐ.நா. அவை மற்றும் உலக நாடுகள் வலியுறுத்தியபோதும் சூகியை விடுதலை செய்ய மறுத்த ஆட்சியாளர்கள், ஐ.நா. பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கக்கூட அனுமதிக்கவில்லை.
இவ்வளவுக்கும் இடையிலும் மக்களிடம் ஜனநாயக ஆட்சிக்கான தாகம் குறைந்துவிடாமல் காத்துவந்தார் ஆங் சான் சூகி. இதற்காகவே அவருக்கு பலமுறை வீட்டுக்காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. கடைசியாக விதிக்கப்பட்ட 18 மாத காவல் நேற்றுடன் முடிவடைந்ததையடுத்து வேறு வழியின்றி அவரை விடுவிக்க ஒப்புக்கொண்டனர் ராணுவ ஆட்சியாளர்கள். இதன்படி நேற்றுமாலை யங்கூன் நகரில் உள்ள சூகி வீட்டின் முன்பு இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு விடுவிக்கப்பட்டார் சூகி. 7 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக வீட்டைவிட்டு வெளியேறிய ஜனநாயக தேவதையை மியான்மரே திரண்டு உற்சாகத்துடன் வரவேற்றது.



சூகியின் விடுதலைக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துக்களும் வரவேற்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. கைது செய்யப்பட்டாலே கத்தி கூப்பாடு போடும் நம்மூர் அரசியல்வாதிகளைப்போல் ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்காமல் விடுதலையானவுடன் தனது அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு தயாராகிவிட்டார் சூகி. ஜனநாயக ஆட்சியை வென்றெடுக்க ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு போராட வேண்டும் என்ற அவரது அழைப்பை மியான்மர் மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். உலகத் தலைவர்களால் ஜனநாயகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் என்று போற்றப்படும் ஆங் சான் சூகியின் பின்னால் நாடே அணி திரண்டால் மியான்மரில் மக்களாட்சி மலரும் நாள் வெகுதூரத்தில் இல்லை...!

3 கருத்துகள்:

மணிமாறன் சொன்னது…

ஆங் சான் சூகி பற்றி நல்ல அறிமுகம். அதுவும் நம்ம ஊர் அரசியல்வாதிகளுடனான ஒப்பீடு அருமை.

sakthivel சொன்னது…

சின்னப் பனித் துளியொன்று , சூரியனைப் படம் பிடிப்பது போல் , ஒரு மாபெரும் வரலாற்றுக் காவியத்தை ஒரே கட்டுரைக்குள் கொண்டுவர முயன்றிருக்கிறார் ,படைப்பாளி முனிசாமி. சூகியின் கோடானுகோடி ஆதரவாளர்களின் நல்லாசி அவருக்கு கிடைப்பதாக!

முனிசாமி. மு சொன்னது…

தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

கருத்துரையிடுக